பயங்கரவாதச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்! – தமிழ்க் கட்சிகள் கோரிக்கை.
“பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக எந்தவொரு முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கப்போவதில்லை. அந்தச் சட்ட வரைவு கைவிடப்பட வேண்டும். அதேவேளை, தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டமும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து அதனை முன்வைத்துள்ள பிற்போட்டுள்ள அரசு, சட்டவரைவு தொடர்பில் திருத்தங்களை முன்வைக்குமாறு கோரியுள்ள நிலையிலேயே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவோம் என்று இலங்கை அரசு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் வாக்குறுதிகளை அளித்திருந்தாலும் அதனைத் தற்போது வரையில் நிறைவேற்றவில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் புதிதாக உருவாக்கப்படும் சட்ட வரைவு ஏற்கனவே உள்ளதைவிட மோசமானது.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக பயங்கரவாதத்தைத் தடுப்பதற்குப் புதிதாக பிறிதொரு சட்டத்தை உருவாக்கத் தேவையில்லை.” – என்றார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், க.சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக பிறிதொரு சட்டத்தைக் கொண்டு வருவதையோ அந்தச் சட்டத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படுவதையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவைக் கைவிடும் அதேநேரம் அரசு உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டும்.” – என்றனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவிக்கையில்,
“நிறைவேற்று அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக கைவிடும் அதேநேரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டும்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின்போது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு மாற்றாக புதிய வரைபொன்றை தயாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அங்கத்துவத்தில் நானும் உள்ளடக்கப்பட்டிருந்தேன். எனினும், எமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி குறித்த குழுவிலிருந்து நான் வெளியேறியுள்ளேன்.” – என்றார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,
“ஜனநாயகத்துக்கும், மனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும். புதிய சட்டமொன்றைக் கொண்டு வருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார்.