மேற்கு நாடுகளின் தாளத்துக்கு ஆடாததால்தான் மஹிந்த – கோட்டா பதவிகளில் இருந்து விரட்டல்! மொட்டு எம்.பி. கூறுகின்றார்.
“மேற்கு நாடுகளுக்குத் தேவையான வகையில் செயற்படாததால்தான் மஹிந்த, கோட்டாபய ஆகியோர் பதவிகளில் இருந்து விரட்டப்பட்டனர்” – என்று மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வீரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பல சந்தர்ப்பங்களில் இந்த நாடு சர்வதேச அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. போர்க் காலத்திலும் அப்படித்தான். போரை நிறுத்துமாறு பல நாடுகள் அழுத்தம் கொடுத்தன. அதை முறியடித்ததால்தான் போரை வெற்றிகொள்ள முடிந்தது.
பொருளாதாரப் பிரச்சினை தலைதூக்கிய போது மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடினர். இந்த மக்களின் போராட்டத்தைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்குச் சிலர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அவர்களால் அந்த இலக்கைப் பூரணப்படுத்த முடியவில்லை.
மேற்கு நாடுகளுக்குத் தேவையான வகையில் செயற்படாததால் மஹிந்த, கோட்டாபய ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இது தொடர்பில் விமல் வீரவன்ச கூறிய விடயங்களில் நாம் உடன்படுகின்றோம். அவர் கூறிய மேலும் சில விடயங்கள் பற்றி எமக்கு எதுவும் தெரியாது.
மஹிந்த, கோட்டாபய ஆகியோர் பதவியில் இருந்து விலகியதும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரை அழைத்துப் பதவியை ஏற்குமாறு கூறினோம். அவர்கள் வரவில்லை. இறுதியில் ரணிலே பாரமேற்றார்.
இன்று அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி எமக்குக் கிடைத்தது.
பழைய நிலைமை இப்போது இல்லை. ஆர்ப்பாட்டங்கள் இல்லை. பெற்றோல் வரிசை இல்லை. மின் வெட்டு இல்லை. ஜனனாதிபதி செய்கின்ற நல்ல வேலைத்திட்டங்களுக்கும் நாம் ஆதரவு வழங்குவோம். ஆனால், பிழையான திட்டங்களை ஏற்கமாட்டோம்.” – என்றார்.