வடக்கில் ஓட்டோச் சாரதிகளை மயக்கித் திருடியவர்களில் ஒருவர் மடக்கிப்பிடிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பயணிகள் போல பாசாங்கு செய்து ஓட்டோச் சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், இருவர் தலைமறைவாகிவிட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறையிலிருந்து ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலைக்கு வந்த ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும், சாரதிக்குக் குளிர்பானத்துக்குள் மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றை அபகரித்துச் சென்றனர். அதே நாளில் கீரிமலையிலிருந்து பருத்தித்துறைக்கு வாடகைக்கு அமர்த்திய மற்றொரு ஓட்டோ சாரதியிடமும் இதே பாணியில் அவர்கள் திருடினர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்தனர்.
இந்தநிலையில், நேற்று அச்சுவேலிப் பகுதியில் இவ்வாறு ஓட்டோவை வாடகைக்கு அமர்த்திய இரு ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் ஆகியோர் சுன்னாகத்துக்குச் சென்றுள்ளனர். அங்கும் இதேபாணியில் மயக்க மருந்து கொடுத்து நகைகளைத் திருட முயன்ற போது கண்டியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் மக்களிடம் அகப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
ஓட்டோ சாரதி தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகைப் பணம் மற்றும் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு திருடுவதற்காகவே வெளிமாகாணங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் விடுதிகளில் அவர்கள் தங்கியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.