திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பிடிஆர் பெயர் நீக்கம்- கட்சியில் சலசலப்பு
திமுகவின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் 1,222 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையின் சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பிடிஆர் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பார் என திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியில் கடந்த 3ம் தேதி அறிவிப்பு வெளியானது. ஆனால் நேற்று மாலையில் சிம்மக்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பான போஸ்டர்களில் அமைச்சர் பிடிஆரின் பெயர் நீக்கப்பட்டு, ஏ.ஜெயரஞ்சன் பெயர் சிறப்பு பேச்சாளராக இடம்பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பங்கேற்கவில்லை.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் குறித்து பழனிவேல் தியாகராஜன் தவறாக பேசியதாக ஆடியோ ஒன்றை பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.
இது பி.டி.ஆருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால், அது தன்னுடைய ஆடியோ இல்லை என்று பி.டி.ஆர் விளக்கம் அளித்திருந்தார். இந்தநிலையில், சாதனை விளக்கப் பொதுக்கூட்டப் பட்டியலில் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளளது.