பிரபாகரனின் வழியிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி! – கஜேந்திரன் கூறுகின்றார்.
“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனும் தனித்தவில்தான். அவரது வழியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனித்தவில்தான்.”
இவ்வாறு அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
‘பல்வேறுபட்ட தரப்புக்கள் நினைவேந்தல்களைக் கைப்பற்ற வேண்டும் என்கின்றனர். அவர்கள் முதலில் நாடாளுமன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களைக் கைப்பற்றட்டும். பின்னர் நினைவேந்தல்களைக் கைப்பற்றலாம். இனத்துக்காகப் போராடிய போராளிகள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் அமைதியாக இருக்கையில் எங்கையோ இருந்த தரப்புக்கள் துள்ளிக்குதிக்கின்றன. தியாக தீபம் திலீபன், அன்னை பூபதி நினைவேந்தல்களில் கடந்த காலங்களில் குழப்பங்கள் ஏற்பட்டன. அவ்வாறு இல்லாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒற்றுமையாக மேற்கொள்ள வேண்டும். யாரும் தனிவாத்தியம் இசைக்காதீர்கள்’ என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் தர்சன் தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரனைக் கேட்ட போது,
“நினைவேந்தல்களைக் கைப்பற்றுவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் சொல்லவில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்ததைப் போன்றுதான் பல்கலைக்கழக சமூகம் இப்போதும் செயற்படுகின்றதா? ஊடக சந்திப்பில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு முன்னர் எங்களுடன் அது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடியிருக்க வேண்டும். ஒற்றையாட்சிக்குள் வரலாறுகளையும் தியாகங்களையும் முடக்க வேண்டும் என்கின்ற இந்தியா மற்றும் இலங்கையினது அடிவருடிகளே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடமிருந்து நினைவேந்தல்களைக் கைப்பற்ற முயற்சிக்கின்றன” – என்றார் கஜேந்திரன்.