பெண்ணொருவர் கழுத்தறுத்துப் படுகொலை! – இரு சகோதரர்கள் கைது.

வாடகை வீடொன்றில் கட்டடப் பணியாளர் ஒருவருடன் வசித்து வந்த காதல் மனைவி எனக் குறிப்பிடப்படும் பெண்ணொருவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் பாதுக்கை, வட்டரெக்கப் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சகோதரர்களில் பெண் சந்தேகநபர் குறித்த கட்டடப் பணியாளரின் முன்னாள் மனைவி என்றும், மற்றயவர் அவரின் தம்பி என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண் சந்தேகநபர் கட்டடப் பணியாளரை விவாகரத்து செய்து சுமார் மூன்று வருடங்களாகின்றன என்றும், அதனால் தான் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார் என்றும் கட்டடப் பணியாளர் வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை குறித்த கட்டடப் பணியாளர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சந்தேகநபர்களான முன்னாள் மனைவியும், அவரது தம்பியும், வீட்டுக்குச் சென்று கொலையுண்ட பெண்ணிடம் பேசி, வீட்டுக்கு வெளியே அழைத்து வந்து கூரான கத்தியால் அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
வலஸ்முல்ல, கட்டுவன, அலுபொத்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த விவாகரத்துப் பெற்ற 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.