திகார் சிறையில் கேங்ஸ்டர் படுகொலை – தமிழ்நாடு போலீசார் 7 பேர் அதிரடியாகப் பணி இடைநீக்கம்
டெல்லி, திகார் சிறையில் கைதி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக போலீசார் 7 பேர், அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்தவர் பிரபல கேங்ஸ்டர் சுனில் மன் என்கிற தில்லு தாஜ்பூரியா ஆள் கடத்தல், கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தில்லு தாஜ்பூரியா தொடர்புடையவர். கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தாஜ்பூரியா திஹார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார்.
கடந்த 2ஆம் தேதி அதிகாலை திஹார் சிறைக்குள், பிரபல கேங்ஸ்டர் ஜிதேந்தர் கோகியின் கூட்டாளிகளுக்கும், தில்லு தாஜ்பூரியாவின் கூட்டாளிகளுக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. இரும்புக் கம்பிகளால் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். அப்போது தனியாக சிக்கிய தில்லு தாஜ்பூரியாவை, ஜிதேந்தர் கோகியின் கூட்டாளிகளான யோகேஷ், தீபக் தீத்தர் ஆகிய இருவரும் சேர்ந்து இரும்புக்கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொன்றனர்.
உடல் முழுக்க படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் சுயநினைவை இழந்த தாஜ்பூரியாவை, சிறைக் காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை தனிச்சிறையில் வைத்து சிறைக்காவலர்கள் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு டெல்லி ரோகினி நீதிமன்றம் முன்பாக பிரபல கேங்ஸ்டர் ஜிதேந்தர் கோகி துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அந்த படுகொலைக்கு சிறையிலிருந்தபடி திட்டம்போட்டுக் கொடுத்தது, தற்போது கைதிகளால் கொல்லப்பட்ட அதே தில்லு தாஜ்பூரியாதான். நீதிமன்ற கொலைக்கு பழிக்குப்பழியாக தில்லு தாஜ்பூரியாவை தீர்த்துக் கட்டினார்களா ? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமெடுத்துள்ளது. இதனிடையே, சிறையில் கைதிகள் மோதிக்கொள்ளும் வரை பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் என்ன செய்தார்கள் ? என்ற கேள்வி, கைதிகளோடு சேர்த்து காவலர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக வெளியான சிறையின் சிசிடிவி கேமிரா காட்சிகள் தமிழ்நாடு சிறப்புப்படை காவலர்களையும் சர்ச்சையில் இழுத்துவிட்டுள்ளது. சம்பவத்தன்று திஹார் சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், கைதிகளுக்கு இடையேயான மோதலை தடுக்காமல் தில்லு தாஜ்பூரியாவை கொலை செய்யும் வரை வேடிக்கை பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட தமிழ்நாடு காவல்துறையினர் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி சிறைத்துறை அதிகாரி, தமிழ்நாடு சிறப்புக் காவல்துறை கமாண்டருக்கு கடிதம் எழுதினார். மேலும், சிறை 8ல் உள்ள அலாரம் பட்டன் வேலை செய்யாமல் இருந்ததை கண்காணிக்காமல் விட்டது குறித்தும் தமிழ்நாடு காவலர்களிடம் விசாரணை நடத்த டெல்லி சிறைத்துறை உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், திகார் சிறையில் பணியில் இருந்த சிறப்புப் படை வீரர்கள் 7 பேரை பணி இடைநீக்கம் செய்து, தமிழ்நாடு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தற்போது காவலர்கள் 7 பேரும் தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம், திகார் சிறையில் நேரில் விசாரணை நடத்த உள்ளார்.விசாரணையின் முடிவில் திகார் சிறையில் கைதி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 7 காவலர்களுக்கும் இடையே தொடர்பு இருக்குமா என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும்.