வடக்கு, கிழக்கு எம்.பிக்களை தனியாகச் சந்திக்க ரணில் விரும்பியது ஏன்? – தமிழரசிடம் அவரே பதில்.
அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பேச்சுக்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைப்பதில் தனக்கு எந்தவொரு ஆட்சேபமும் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் தயார்படுத்தப்படாமையால் வடக்கு அபிவிருத்தி தொடர்பான விடயத்தையும் ஒத்திவைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் மற்றும் அந்தக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
சந்திப்பின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நேற்றுமுன்தினம் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் பேச்சை தொடங்கியது.
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற கருத்தியலுக்கு அமைவாகவே தமது பேச்சுக்கள் இருக்கும் என்பதை எடுத்துரைத்தனர். நாளை, நாளைமறுதினம், அதற்கு மறுநாள் என்று 3 நாள் பேச்சுக்களில் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தமை தொடர்பில் ஆட்சேபம் எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிக்கவில்லை என்றும், முதலில் வடக்கு மாகாணம் தொடர்பில் பேசிவிட்டு பின்னர் கிழக்கு மாகாணத்துடன் அதேபோன்றதொரு தனியான சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
அதிகாரப் பகிர்வு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு – கிழக்கு என்று பிரித்துப் பேச முடியாது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டினர். அதனை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்கு அமைவாக கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து நாளை 11 ஆம் திகதி பொதுப்பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் தொடர்பிலும், மறுநாள் 12ஆம் திகதி அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் பேச இணக்கம் காணப்பட்டது.
கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் திட்டவரைவு தயாரில்லாததால் வடக்கு அபிவிருத்தி தொடர்பில் 13ஆம் திகதி பேசுவதில்லை என்றும், கிழக்கு அபிவிருத்தி தொடர்பான திட்டவரைவு தயாராகிய பின்னர் இரு மாகாணங்களையும் இணைத்துப் பேசுவது என்றும் நேற்று முடிவு செய்யப்பட்டது.