பிரதமர், ஜனாதிபதி தங்கும் விடுதியில் ஏழை மாணவியை தங்கவைத்த ஆளுநர்…!
தமிழ்நாடு ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக குடியரசுத் தலைவர், பிரதமர் தங்கும் விருந்தினர் மாளிகையில் மாணவி ஒருவர் தங்க வைக்கப்பட்டார்.
மாநில அளவில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி சென்னை வந்து முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவியின் உயர் கல்விச் செலவை அரசு ஏற்கும் என்று நந்தினியை உற்சாகப்படுத்தி முதல்வர் அனுப்பி வைத்தார்.
இதனை அடுத்த நிகழ்வாக பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார். மாணவர்களின் விருப்பத்தை கேட்டறிந்த ஆளுநர், அடுத்த கட்ட பயணம் குறித்து பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து பெற்றோருடன் சென்னை வந்தடைந்த ஷப்ரீன் இமானா, ராஜ்பவனில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். விதிமுறைப்படி இங்கே தனி நபர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என்று ராஜ்பவன் அதிகாரிகள், ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர்களிடம், மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் பெற்ற மாணவி. ஏழை கூலித் தொழிலாளி குடும்பம். தமிழ் வழியில் கல்வி பயின்று சாதனை படைத்துள்ளார். அவருக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறே இல்லை என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்த பிறகே, மாணவி ஷப்ரீன் இமானா குடும்பத்துக்காக ராஜ்பவனில் உள்ள விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர் தங்கக்கூடிய விடுதியில் தான் குடும்பத்துடன் தங்கியிருந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக மாணவி ஷப்ரின் இமானா தெரிவித்தார்.