ஐபிஎல் தொடரில் புதிய சாதனைகளை படைத்த மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மும்பையில் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி சூர்யகுக்மார் யாதவ், நேகல் வதேரா மற்றும் இஷன் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த 200 ரன் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்ததன் மூலம் மும்பை அணி இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளது. 1. ஒரு ஐபிஎல் சீசனில் 200+ ரன்களை அதிக முறை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக 2014-ம் ஆண்டு பஞ்சாப் அணி 2 முறை 200+ ரன்களையும், 2014-ம் ஆண்டு சென்னை அணி 2 முறை 200+ ரன்களையும் சேசிங் செய்துள்ளது. ஆனால் மும்பை அணி இந்த சீசனில் இதுவரை 3 முறை (பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு) 200+ ரன்களை சேசிங் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. 2. 200+ ரன்களை சேசிங் செய்து வெற்றி பெறும் போது அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையும் மும்பை படைத்துள்ளது.
மும்பை அணி நேற்றைய ஆட்டத்தில் 21 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டு டெல்லி அணி குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 பந்துகளை மீதம் வைத்தும், 2010-ம் ஆண்டு பஞ்சாப் அணி கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் 10 பந்துகளை மீதம் வைத்தும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.