மன்னார் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி – சிறுவர்களுக்கு விசேட பாதுகாப்பு!

மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நாட்களில் பாடசாலைகள் மற்றும் வீதிகள் முன்பாக விசேட பாதுகாப்பை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வேனில் வந்த சிலர் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு உணவு வகைகளை வழங்கி அவர்களை கடத்திச் செல்ல முற்பட்ட போது இரு குழந்தைகள் தப்பிக்க கூக்குரலிட்ட போது அப்பகுதி மக்களுக்கு பயந்து வேனில் வந்தவர்கள் தப்பித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மன்னார் பொலிஸாருக்கும் , பாடசாலைக்கும் அறிவித்ததையடுத்து , மன்னார் மாவட்ட அலுவலகம், பாடசாலை அதிபர்கள், மன்னார் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து கலந்துரையாடி விசேட பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, மன்னார் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாகவும், வீதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறுவர்களை வீதியில் தனியாக நடமாட வேண்டாம் எனவும் , குழுவாக நடமாடுமாறும் அறிவித்துள்ளனர்.
மேலும், வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும்போது, குழுவாக அல்லது வீட்டில் பெரியவர்களுடன் பள்ளிக்கு வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்தவர்கள் யார் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.