ராஜமெளலி உருவாக்கப் போகும் `மகாபாரதம் ‘
பிரமாண்டத்திற்குப் பெயர் போன இயக்குநரான ராஜமெளலி மகாபாரதக் கதையை 10 பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
CG தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில் புராணங்களையும், வரலாறுகளையும் திரைப்படமாக எடுப்பது ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக, ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’ போன்ற புராணங்களை இந்த கால ரசிகர்களுக்கு ஏற்ப திரைப்படமாக எடுப்பதில் பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் ராமாயணக் கதையை மையமாக வைத்து ‘ஆதிபுருஷ்’ எனும் படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தவரிசையில் ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படங்களை இயக்கிய ராஜமெளலி, மகாபாரதக் கதையை 10 பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளார். இதற்குமுன் பல தொலைக்காட்சி தொடர்களில் இந்த மகாபாரதக் கதை ஒளிப்பரப்பட்டுள்ளது. இருப்பினும், பிரமாண்டத்திற்குப் பெயர்போன இயக்குநரான ராஜமெளலி இதை புதிவிதமாக எப்படி காட்சிப்படுத்தப்போகிறார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
இதுபற்றி ஏற்கனவே வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஜமெளலி, “மகாபாரதத்திற்கு நான் எழுதும் கதாபாத்திரங்கள் நீங்கள் முன்பு பார்த்தது அல்லது படித்தது போல் இருக்காது. கதையில் மாற்றம் இருக்காது, ஆனால் கதாபாத்திரங்கள் மேம்படுத்தப்படும் மற்றும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள் மேம்படுத்தப்படும். மகாபாரதத்தை நான் எனது பாணியில் எடுப்பேன். இதில் யார் யார் எந்தக் காதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற பட்டியலை மக்கள் உருவாக்கியுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், மகாபாரதத்தின் திரைக்கதையை நான் எழுதிய பிறகுதான் என்னுடைய கதாபாத்திரங்களை முடிவு செய்வேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் நேற்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜமெளலி, “நான் மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டால், நாட்டில் கிடைக்கும் மகாபாரதத்தின் பல பதிப்புகளைப் படிக்க வேண்டும். அதற்குக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகிவிடும். தற்போது, இது 10 பாகங்கள் கொண்ட படமாக இருக்கும் என்று மட்டுமே என்னால் யூகிக்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.