வடக்கு – கிழக்கை ஒரே அலகாகக் கருதி ஜனாதிபதி – TNA இடையே நாளை பேச்சுவார்த்தை
அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளுடனான கூட்டுக் கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைக்கு அமைவாகவே ஜனாதிபதி இவ்வாறான கூட்டுக் கலந்துரையாடலுக்கு இணங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகாரப் பரவலாக்கத்திற்கான தமிழ் அரசியல் கோரிக்கையானது வடக்கு-கிழக்கு இணைந்த கூட்டாட்சி முறையிலான சுயாட்சியாகும்.
“வடக்கை தனியாகவும் , கிழக்கை தனியாகவும் என பிரித்து பார்க்க முடியாது என்று நாங்கள் கூறினோம். எனவே தமிழ் பிரதேசங்கள் தொடர்பாக இணைந்தே பேசுவோம் என்றோம். அதற்கு ஜனாதிபதி தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியுடனான நேற்றைய (மே 9) சந்திப்பின் பின் தெரிவித்தார்.
உலக தொழிலாளர் தினத்தில் , தமிழ் கட்சிகளை அரசாங்கத்தில் அங்கம் வகித்து , தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்ததை அடுத்து , தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
“11ஆம் திகதி காணிப்பிரச்சினை தொடர்பான சகல விடயங்களையும் முதலாவதாக பேசவுள்ளோம், மறுநாள் 12ஆம் திகதி அதிகாரப் பகிர்வு முறை தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படவுள்ளனர். .”
2023 பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்த ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியதோடு, இந்த ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி நடைபெற்ற பல கட்சிகள் இணைந்து பங்குகொண்ட மாநாட்டினாலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை தமிழ் அரசுக் கட்சி (ITAK) பிரதிநிதிகளுடனேயே பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க உடனடியாக தலையிட வேண்டும் என தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் ஜனாதிபதியிடம் கோரிய போது ரணில் விக்ரமசிங்க தனது இயலாமையை வெளிப்படுத்திய விதத்தை தமிழ் வெகுஜன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் சிவஞானம் ஸ்ரீதரன், சாணக்யன் இராசமாணிக்கம், தவராசா கலையரசன் ஆகியோரும் கலந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.