டெங்கைக் கட்டுப்படுத்த யாழில் டெங்குவாரம் – யாழ் அரச அதிபர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
டெங்கு நோய் என்பது கட்டுப்படுத்தக்கூடிய அதே நேரம் ஒரு ஆபத்தான விடயம். ஆகவே இந்த பருவப்பெயர்ச்சி மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக நாங்கள் முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்தக்கூடிய செயற்பாகளை மேற்கொள்வேண்டும். இதற்காகவே இன்றைய தினம் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கின்றோம்.
அனைத்து தரப்பினரையும் அழைத்து இந்த கூட்டத்தினை நடாத்தி இருக்கின்றோம். இந்த டெங்கு நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் இன்று ஆராய்ந்திருக்கின்றோம். ரெங்கு ஓழிப்பு தொடர்பில் உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் அதிகமாக காணப்படுகின்றது. டெங்கு ஒழிப்பு தொடர்பில் அதிகளவில் சேவையாற்ற கூடியவர்கள் இந்த உள்ளூராட்சி சபையினரே. அத்தோடுஅவர்களுக்கு டெங்கை ஓழிப்பதற்கான
பொறுப்பும் இருக்கின்றது
டெங்கு ஓழிப்பு தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கழிவுகளை அகற்றுவது பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது.படித்தவர்களிலிருந்து பாமர மக்கள் வரை கழிவகற்றல் விடயத்தில் சிக்கலான நிலை காணப்படுகின்றதை வீதிகளில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. வெறும் காணிகளில் குப்பைகளை கொட்டி வருகின்றார்கள். இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
உள்ளுராட்சி சபை சட்டத்தின் படி பராமரிக்காத காணிகளை சுவீகரிக்க முடியும். பாவணையில்லாத காணிகளுக்கு விளம்பர பதாகைகளை போடுங்கள் அப்போது உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து தங்கள் காணியினை துப்பரவுசெய்வார்கள். உள்ளூராட்சி சபையினர் வெற்று காணிகள் தொடர்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
இந்த வருடம் கொரோணா காரணமாக உள்ளூராட்சி மன்றங்கள் பலவிதமான வரி இழப்பினை சந்தித்திருக்கிறார்கள். பொது மக்களுக்கு நாங்கள் சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்தி சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தான் இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும்.
எனினும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தினர்அனைவரும் இதனை ஒரு சமூகப் பொறுப்பாக நினைத்து டெங்கினைகட்டுப்படுத்த முன்வர வேண்டும். டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பில் நாம் இன்றுவரை திறமையாகச் செயற்பட்டு வருகின்றோம். இனிவரும் காலங்களிலும் அவ்வாறு செயற்படுவதன் மூலம் தான் இதனைகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
எமது மாவட்டத்திற்கு இன்னும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. கட்டுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கிராம மட்டங்களில் சுகாதாரக் குழு கூட்டங்களை அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதேபோல் சுற்றாடல் போலீஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்உதவியுடன் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும்.
எனவே இந்த டெங்கு நிலைமையினை கருத்தில் கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக முன்னேற்பாடான விடயமாக யாழ் மாவட்டத்தில் இந்த மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு விழிப்புணர்வு வாரமாக அறிவிக்கவுள்ளோம். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய இடங்களை அவதானித்து கழிவுகளை அகற்றி இந்த வாரத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது,என்றார்.