தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம்.. அமைச்சராக பதவியேற்கும் டிஆர்பி ராஜா
தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக இன்று பதவியேற்கும் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இருமுறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
டிஆர்பி ராஜா இன்று காலை பதவியேற்கும் நிலையில் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்துப் பேசினார். இந்நிலையில், மேலும் சில அமைச்சர்களின் இலாக்காக்களின் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது.அதன்படி புதிதாக பொறுப்பேற்கும் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுவுக்கு, பிடிஆர் பழனிவேல் ராஜன் வகித்து வரும் நிதித்துறை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்படுவதுடன் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது