இயல்பு நிலைக்கு திரும்பும் மணிப்பூர்: 6 மணி நேரத்துக்கு ஊரடங்கு தளர்வு
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மேம்பட்டு வருவதால், ஊரடங்கில் 6 மணி நேரத்துக்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அத்தியாவசியப் பொருட்களை வாங்க சந்தைகளில் பொதுமக்கள் பெருமளவில் குவிந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை வகிக்கும் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மெய்ட்டி சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிற சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது வன்முறையாக மாறி, பல்வேறு கட்டிடங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ராணுவமும், அசாம் ரைஃபிள்ஸ் படையினரும் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்தார். மேலும், 30 ஆயிரம் பேர் வீடுகளை இழந்த நிலையில், 26 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிலைமை மேம்பட்டு வருவதால், இம்பால் மேற்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 6 மணி நேரத்துக்கு புதன்கிழமை காலை ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. காலை 5 மணி முதல் 11 மணிவரை தளர்வு அளிக்கப்பட்டதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க சந்தைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.இதேபோல, பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் இருப்பு குறைவாக இருந்ததால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில், அறிக்கை வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி, மியான்மர் நகர்ப் பகுதியில் மட்டுமன்றி, இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.இயல்பு நிலை திரும்பி வருவதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருவதாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.இதனிடையே, மணிப்பூரிலிருந்து அசாம், மேற்குவங்கம், நாகாலாந்து மாநிலங்களைச் சேர்ந்த பலரும் மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.