ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் அதிரடி.. ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் அய்யர் 57 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 14வது ஓவரிலேயே இலக்கை எட்டியது.
துவக்க வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டினார்.
13 பந்துகளில் அரை சதம் கடந்த ஜெய்ஸ்வால், தொடர்ந்து பந்துகளை பவுண்டரி சிக்சர்களாக பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 13 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஜெய்ஸ்வால் 97 ரன் எடுத்திருந்தார். 14வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்து, வெற்றியை எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த பந்தில் அவர் பவுண்டரி அடித்தார். எனவே 41 பந்துகள் மீதமிருந்த நிலையில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 98 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.