1,000 டொலர் நோட்டுகளைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றவருக்கு 3,500 டொலர் அபராதம்.
சிங்கப்பூரில் $1,000 நோட்டுகளின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் அந்நோட்டுகளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்கத் திட்டமிட்டார் நாணய மாற்று வணிகரான அகமது சாஹிப் ஸியாவுதீன் அப்துல் ரஹ்மான், 47.
பீப்பள்ஸ் பார்க் சென்டரில் கடை வைத்திருந்த அவர், 2020 டிசம்பரில் மேபேங்க் வங்கி அதிகாரியிடம் ஒரு நோட்டுக்கு $2 முதல் $3 வரை தரகுப் பணம் தருவதாகக் கூறினார். அந்த விவகாரம் குறித்து லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அகமது சாஹிப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் $1,000 நோட்டுகளை விநியோகிக்கப் போவதில்லை என்று 2020 நவம்பர் 3ஆம் தேதி அறிவித்து இருந்தது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், பயங்கரவாதத்துக்கு நிதியாதரவு வழங்குதல் போன்றவற்றைக் குறைக்கும் நோக்கில் அவ்வாறு அறிவிக்கப்பட்டது.