காணி ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துங்கள் தமிழ் எம்.பிக்களின் கோரிக்கையையடுத்து உரிய தரப்புக்களுக்கு ஜனாதிபதி உத்தரவு.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம், தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் உட்பட சகல அரச திணைக்களங்களும் முன்னெடுக்கும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களின் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது திணைக்களங்களின் பணிப்பாளர்களும் பங்கேற்றிருந்த நிலையிலேயே அவர்களுக்கு இந்தக் கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
அதேவேளை, இந்தச் சந்திப்பில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆளும் தரப்பின் யோசனையை அடியோடு நிராகரித்தனர் வடக்கு – கிழக்கு தமிழ் எம்.பிக்கள்.
படையினர் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும், தொல்லியல் திணைக்களம் பௌத்த மேலாதிக்கவாதத்தை நிலைநிறுத்த முயலும் நிலையிலும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத நிலையிலும், பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களால் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்டாத நிலையிலும் இப்போதைக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவது என்பது சாத்தியமில்லை என்று ஜனாதிபதியிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தனர் வடக்கு – கிழக்கு தமிழ் எம்.பிக்கள்.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இரண்டு நாள் பேச்சின் முதலாம் நாள் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.
இந்தப் பேச்சில் 5 முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல்கள் மற்றும் படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகிய ஐந்து விடயங்கள் குறித்தே பேசப்பட்டன.
இந்தப் பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதியுடனான சுமார் இரண்டு மணித்தியால சந்திப்பில் காணி விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அரசியல் கைதிகள் விவகாரம் ஆகியன தொடர்பில் பேசினோம்.
காணி விவகாரத்தில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் பற்றிக் குறிப்பாகச் சுட்டிக்காட்டினோம். எமது கருத்துக்களை செவிமடுத்ததன் பின்னர் கடந்த இரண்டு வருட காலத்தில் பல்வேறு தவறான விடயங்களைச் செய்திருப்பதாக ஏற்றுக்கொண்ட தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர், அவற்றைத் தற்போது திருத்துவதாகக் குறிப்பிட்டார். திருத்துவதற்கு முன்னதாக அவற்றை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துமாறும், இது பற்றிக் கலந்துரையாடித் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும் வரையில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கக்கூடாது என்றும் ஜனாதிபதியால் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
அதேபோன்று வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களைப் பொறுத்தமட்டில் 1985 ஆம் ஆண்டு வரைபடத்துக்கு மீண்டும் செல்ல முயல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும், இதுவரையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டினோம்.
அதற்குப் பதிலளித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள், தாம் உரிய தரவுகளைத் தயாரித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்குவதாகக் கூறினர்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அவசியமில்லை என்று நானும் சி.வி.விக்னேஸ்வரனும் எடுத்துரைத்தோம். அதுமாத்திரமன்றி தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினோம்.
அதேபோன்று வடக்கு, கிழக்கில் பாரதூரமான காணிப் பிரச்சினை நிலவுகின்ற போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏன் அமைக்க வேண்டும் என்று வினவினோம். குறிப்பாக இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாட வேண்டியது அவசியம் என்றும், இருப்பினும் அதற்குரிய நடவடிக்கைகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினோம். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
அரசியல் கைதிகள் விவகாரத்தைப் பொறுத்தமட்டில் தற்போது சிறைகளில் உள்ள 30 பேரில் 14 பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதுடன் 16 பேர் தொடர்பில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் தீர்ப்பளிக்கப்பட்ட 14 பேரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தினோம். அதில் மகேஸ்வரன் படுகொலை மற்றும் சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புபட்ட இருவர் குறித்துப் சம்பந்தப்பட்டவர்களின் கருத்து, சம்மதம் கோரப்பட்டிருப்பதாகவும் ஏனைய 12 பேரை விடுவிப்பது குறித்துப் பரிசீலிப்பதாகவும் பதில் வழங்கப்பட்டது.” – என்றார்.
இந்தப் பேச்சில் ஆளும் தரப்பில் அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஸ, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோரும், சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோதராதலிங்கம், இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த.கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனும், ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்துகொண்டனர்.
கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் மற்றும் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தப் பேச்சில் கலந்துகொள்ளவில்லை.