அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறை நவீனமயப்படுத்தப்படும்.

சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்கு செலவிட்டிருந்தால் ஆசியாவின் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும்.

“skills Expo 2023” நிகழ்வில் ஜனாதிபதி உரை

அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த பத்து வருடங்களில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
திறன் மற்றும் தொழில் கண்காட்சியான “skills Expo 2023” நிகழ்வில் இன்று (12) கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வாழ்க்கைக்கு திறன் – திறனுக்கு தொழில்” என்ற தொனிப்பொருளின் கீழ் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் மேற்படி கண்காட்சி இம் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியை அனைவரும் இலவசமாக பார்வையிடலாம்.

Sri Lanka Skills Expo 2023 கண்காட்சியின் ஊடாக நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் கொள்கை தயாரிப்பாளர்களுக்கும் கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்பதோடு, துறைசார் திறன் விருத்தியின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கும் வலுவானதொரு பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sri Lanka Skills Expo 2023 கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி கண்காட்சியை பார்வையிட வந்தவர்களோடும் கலந்துரையாடினார்.

தொழில்நுட்ப விவசாய வேலைத்திட்டத்திற்கான இணையத் தளத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றதோடு, தொழில்நுட்ப விவசாயக் செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையிலான் ட்ரோன் பாவனையை ஊக்குவிக்கும் விதமாக ட்ரோன் தொழில்நுட்பவியலாளர்கள் மூவருக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இங்கு ஏற்பாட்டு பணிகளை முன்னெடுத்த மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன். கடந்த வருடத்தை திரும்பி பார்க்கின்ற போது இவ்வாறானதொரு கண்காட்சியை நடத்த எம்மால் முடியுமா என்பது கேள்விக்குரியாகியிருந்தது. குழப்பகரமான சூழலில் முடங்கிக் கிடந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

நாம் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல் எமது செலவுகளையும் நாம் உரிய முறையில் முகாமைத்துவம் செய்திருக்கலாம். கடந்த பத்து வருடங்களில் நமது செலவினங்கள் தொடர்பில் பார்கின்ற போது, நாம் கல்விக்கு பணம் ஒதுக்கீடு செய்யாமல் சில அரச நிறுவனங்களுக்கே அதிகமாக பணம் ஒதுக்கீடு செய்துள்ளோம்
என்பதை கண்டுகொண்டேன்.

நாம் ஸ்ரீ லங்கன் விமான சேவை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு செலவிட்ட பணத்தை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் செலவிட்டிருந்தால் தெற்காசியாவின் மிகச்சிறந்த கல்வித்துறையை கொண்ட நாடுகளுடன் போட்டியிடும் நிலையை அடைந்திருப்போம். அவை ஒன்றையும் நாம் செய்யாமையால் இன்று கடன்களை செலுத்தி முடிக்க வேண்டிய நிலை நமக்கு உருவாகியுள்ளது. அடுத்த பத்து வருடங்களில் விரைவாக கடன்களை செலுத்தி முடிக்கவே நான் முயற்சிக்கிறேன்.

நாட்டிற்கு பயனற்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் காணப்பட்டன. அவ்வாறான திட்டங்களுக்கு வழங்கிய நிதிக்கு என்ன ஆனது என்பது இன்று வரையிலும் மர்மமாகவே உள்ளது. அவ்வாறான செலவுகளையே நாம் முதலில் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக நாம் அத்தியாவசியமற்ற சேவைகளை முதலில் கட்டுப்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அதற்காக அத்தியாவசிய சேவைகளுக்கான செலவீனங்கள் மட்டுப்படுத்தப்படாது. எதிர்காலத்தில் கல்வி,சுகாதாரம்,சமூக பாதுகாப்பு, வீடமைப்பு ஆகிய விடயங்களுக்காக மாத்திரம் சலுகை வழங்கல் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.


அதேபோன்று, நாட்டுக்கு நல்ல கல்வி முறையொன்று அவசியம். இந்தக் கல்வி முறையில் மிக முக்கியமான விடயம் பிள்ளைகளுக்குத் தேவையான அறிவை வழங்குவது. நாம் அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம். அனைவருக்கும் தேவையான அறிவை வழங்க முடிந்தால், நாட்டின் எதிர்கால வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

இலங்கை, அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய நாடாகும். எனவே, அறிவை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். பாடசாலைக் கல்வியை வழங்கிய பின், தொழில் தகைமையை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இன்று பல அமைப்புகள் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இன்றைய தேவைக்கேற்ப நமது கல்விமுறை நவீனமயப்படுத்தப்படவில்லை. அதனால் நாம் 10-15 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம். நாம் இப்போது புதிதாக சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்த அறிவை வழங்குவதற்கு தேவையான பயிற்சியை அரசாங்கத்தால் மாத்திரம் வழங்க முடியாது. அந்த பயிற்சி மற்றும் அறிவு பெரும்பாலானவை அரசாங்கத்திற்கு வெளியே உள்ளன. இந்த அறிவை வழங்கக் கூடிய தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்தப் பணியை முறையாகச் செயல்படுத்துவதற்காக, இந்தமுறை கல்வி அமைச்சை ஒரு அமைச்சருக்கு வழங்கினோம். இந்த முழுமையான பொறிமுறையிலும் அவர் கவனம் செலுத்தி, அதற்கான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். கல்விக்காக நாம் தனி அமைச்சரவைக் குழுவை நியமித்துள்ளோம். எனவே கல்வியின் நவீனமயமாக்கலை இங்கிருந்து தொடங்குவோம். நாம் ஒரு புதிய உலகத்தை நோக்கி நகர்கிறோம்.

இன்னும் பத்து ஆண்டுகளில் நமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படும். ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்திற்காக நாம் கல்வியை உருவாக்க வேண்டும். அதற்கான பலமான வேலைத்திட்டம் தேவை. இளைஞர்களுக்கு இதுபற்றி முறையாகத் தெளிவுபடுத்தி, எதிர்காலத்திற்குத் தேவையான அறிவும் திறமையும் கொண்ட ஒரு பரிபூரண சமுதாயத்தை உருவாக்குவதே எனது எதிர்பார்ப்பு ஆகும். அதற்குத் தேவையான நிதியை 2024ஆம் ஆண்டு முதல் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.