இறந்த மாணவி 20,000 ரூபாவுக்கு விற்கப்பட்டாரா? பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்!
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 16 வயதுடைய மாணவியை, சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு பணத்திற்காக விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த மாணவியுடன் விடுதிக்கு சென்ற இறந்த பெண்ணின் தோழியின் காதலன் உயிரிழந்த மாணவியை சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு 20,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதன்படி பிரதான சந்தேக நபர் பணத்தின் ஒரு பகுதியை அவரிடம் கொடுத்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இன்று (12) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மாணவியின் மரணம் தற்கொலையா? கொலையா? என இன்னும் முடிவுக்கு வர முடியவில்லை.
உயிரிழந்த மாணவிக்கு கடைசியாக தொலைபேசி அழைப்பு விடுத்தது யார் என்பதை இதுவரை பொலிசார் கண்டுபிடிக்கவில்லை.
கைதான சந்தேக நபர் இருதய நோயாளி எனவும், சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பை வழங்குமாறும் பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.
இதேவேளை, சிறுமியின் கால் மற்றும் மார்பகத்தில் பற்களின் அடையாளங்கள் காணப்படுவதால் என சந்தேக நபரை சட்ட வைத்தியர் ஒருவரை பார்வையிட அனுமதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் சந்தேகநபர் மே 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று (11) குறித்த விடுதிக்கு உயிரிழந்த சிறுமியின் குடும்ப உறுப்பினர்களிடமும் அவருடன் சென்ற 19 வயதுடைய மாணவியிடமும் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பிரதான சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.