தமிழ் இனப் படுகொலை: பயணத்தைத் தொடங்கியது நினைவேந்தல் ஊர்தி!
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை – தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனி நேற்று முல்லைத்தீவில் இருந்து தொடங்கியது. நேற்றிரவு வவுனியாவைச் சென்றடைந்த அந்த ஊர்தி இன்று மன்னார் நோக்கிப் பயணிக்கவுள்ளது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.
தமிழ் இனப் படுகொலையின் நினைவாக இந்த ஆண்டு பல பகுதிகளிலும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு பல தரப்பினராலும் ஒழுங்கமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன.
நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் இந்தக் கஞ்சி வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் மற்றொரு அங்கமாக முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனி தொடங்கப்பட்டது.
வரலாறுகள் எதிர்கால சந்ததிக்கு கடத்தப்படுவதன் ஊடாக எங்களுடைய நீதி கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டங்களைத் தொடர வேண்டும் என்கின்ற அடிப்படையிலே முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்திப் பவனி முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டது என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து நேற்றுக் காலை தொடங்கியது இந்த ஊர்திப் பவனி.
முள்ளிவாய்க்காலில் இருந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு நகரை வந்தடைந்த ஊர்தி, அங்கிருந்து முள்ளியவளை, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, புளியங்குளம் ஆகிய பகுதிகளில் மக்கள் அஞ்சலிகளோடு இரவு வவுனியாவைச் சென்றடைந்துள்ளது.
மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் செல்லும் இந்த ஊர்தி மீண்டும் கிளிநொச்சி மாவட்டம் ஊடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை மே 18 வந்தடையும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.