புதுச்சேரியில் 120 அடி ஆழ கிணற்றில் விழுந்து 3 நாட்களாக தவித்த முதியவர்..!

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்த பாவாடை(70). இவர் உறவினர் வீட்டிற்கு வந்த போது வழி தவறி மடுகரையில் 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்து விட்டார். அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பாவாடையின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. 3 நாட்களாய் அவர் கத்தி கத்தி மயங்கமடைந்துள்ளார்.
மீண்டும் நேற்று காலை லேசாக மயக்கம் தெளிய, மீண்டும் தன்னை காப்பாற்றும் படி கத்தியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற ஊர்காரர் ஒருவர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மடுகரை தீயணைப்பு வீரர்களும் கிராம மக்களும் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாவாடையை மீட்டனர்.
நெற்றியில் காயத்துடன் மடுகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற அவர் கடலூர் பட்டாம்பாக்கத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். மூன்று நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவர் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் சுற்று பகுதி கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.