கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில் அக்கட்சித்தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 133 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து பல சுற்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் முன்னிலை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டும், பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துகொண்டும் வருவதைக் காண முடிகிறது.
இந்த நிலையில், பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல், கர்நாடக காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் சித்தராமையா உள்ளிட்டோருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.