பிணைமுறி விவாதத்துக்கு அஞ்சியே சபையிலிருந்து எதிரணி வெளிநடப்பு – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க
“நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விவாதத்துக்கு முகம் கொடுக்கப் பயந்தே எதிர்க்கட்சியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.”
– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக மரணதண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகர நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து எதிர்க்கட்சியினர் பெரும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
கறுப்பு சால்வை அணிந்து சபையில் தோன்றிய அவர்கள், பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப் பிரமாணம் சட்டபூர்வமற்றது; அது அரசமைப்புக்கு முரணானது என்று கோஷம் எழுப்பியதுடன் தமது தோளில் அணிந்திருந்த கறுப்பு சால்வையையும் சபா பீடத்துக்கு மத்தியில் வீசி எறிந்தனர். அதையடுத்து அவர்கள் சபையிலிருந்து வெளிநடப்பும் செய்தனர்.
அதன்பின்னர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
“மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விவாதத்துக்கு முகம் கொடுக்கப் பயந்தே எதிர்க்கட்சியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இவர்களின் இந்த வெளிநடப்பு திட்டமிட்ட நாடகமாகும். நீதிமன்றத்தின் அனுமதியுடன் பிரேமலால் ஜயசேகர எம்.பியாகப் பதவியேற்றுள்ளார். அவரின் சத்தியப்பிரமாணத்தை சபையில் எவரும் பலவீனப்படுத்தவில்லை ” என்றார்.