கொழும்பில் இரண்டு நாட்களாகத் தொடரும் பதற்றம்! முக்கிய இடங்களில் படைகள் குவிப்பு!!
அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் ‘சதி’ நடவடிக்கையொன்று இடம்பெறுவதாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலையடுத்து கொழும்பில் பல முக்கியமான இடங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். கவச வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார், முப்படையினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவினரை உள்ளடக்கிய வகையில் விசேட கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், குருநாகலை உட்பட நாட்டில் ஏனைய சில இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி, அரசுக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் இரகசிய நடவடிக்கை இடம்பெறுகின்றது என்று புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிட்டியுள்ளது. இதையடுத்து கொழும்பு பல்கலைக்கழகம், சுதந்திர சதுக்கம், அலரிமாளிகை வளாகம் உட்பட மேலும் சில இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வீதிச் சோதனைச் சாவடி உட்பட விசேட பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவிடம் இருந்து மீளத் தகவல் கிடைக்கப் பெறும் வரை இந்தப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதையடுத்து அது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல கோணங்களில் தகவல்கள் பரவின. மஹிந்தவை பிரதமராக்கவே – சதியின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றவே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு என்ற தகவலும் இதில் உள்ளடங்கியிருந்தது.