ஜனாதிபதியை அவசரமாகத் தொடர்பு கொண்டார் சம்பந்தன்! திருமலையில் புத்தர் சிலையை நிறுவும் முயற்சி தடுத்து நிறுத்தம்!!
திருகோணமலை நகரத்தில் நெல்சன் தியேட்டருக்கு முன்பாக உள்ள காணியில் தாய்லாந்தில் இருந்து வரும் பிக்குகளால் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை உடன் தடுத்து நிறுத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் பேசியுள்ளார். இதையடுத்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை விதைக்கும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியின் செயலாளரால் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, திருகோணமலை மாவட்ட செயலாளரைத் தொடர்பு கொண்டு இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்திருந்த உத்தரவைத் தெரிவித்ததோடு, அது குறித்த நடவடிக்களையும் முன்னெடுக்குமாறும் பணித்துள்ளார்.
குறித்த உத்தரவுக்கு அமைவாக, திருகோணமலை மாவட்ட செயலாளர் அஸ்கிரிய பீடாதிபதி மற்றும் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஏனைய தரப்பினர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இந்த நகர்வுகளைத் தொடர்ந்து சிலையை வைப்பதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் எவையும் நேற்றிரவு வரை முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, திருகோணமலையில் நகரத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு எதிராகத் தமிழ்த் தேசியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் நேற்று இரவிரவாகத் தொடர்ந்தது. இன்று அதிகாலையும் போராட்டம் தொடர்கின்றது.