கா்நாடகத்தின் அடுத்த முதல்வா் யாா்? இன்று முக்கிய முடிவு!
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகிய இரண்டு பேரில் யாருக்கு முதலமைச்சர் பதவி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ள அதே சமயத்தில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதங்களும் தொடங்கி விட்டன. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருக்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகிய இருவருமே தத்தமது தொகுதிகளில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இரு தலைவர்களின் தொண்டர்களும் தங்களது தலைவர்களை முதலமைச்சராக்க வேண்டும் என பரஸ்பரம் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் குறித்து தற்போது பேச விரும்பவில்லை என்றார்.
அதே சமயம், கர்நாடகாவின் நலனுக்காக தனது தந்தையை முதலமைச்சராக்க வேண்டும் என்று சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார். கடந்த முறை தனது தந்தை சிறப்பாக ஆட்சி செய்தார் என்றும் இந்த முறை மீண்டும் அவர் முதலமைச்சரானால், பாஜக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்கள், சரிசெய்யப்படும் எனவும் யதீந்திர சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் பணிகளுக்காக மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் உட்பட 2 பேர் அடங்கிய மேலிட பார்வையாளர் குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. இந்தக் குழு பெங்களூருவுக்கு விரைந்துள்ளது. இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள், தேர்தல் மேற்பார்வையாளர்களுடன் கலந்தாலோசித்து கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் என்பது அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
மேலும், குதிரை பேரத்தை தடுக்கும் வகையில், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பெங்களூரு அழைத்து வந்து, தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.