12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணினி ஆசிரியர் கைது !
அரசு பள்ளியில் பயிலும் 12 மாணவிகளை அங்கு பணிபுரியும் கம்யூட்டர் ஆசிரியர் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கிய அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள தில்ஹார் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் அணில் குமார். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முகமது அலி என்ற ஆசிரியர்கணினி பாடங்கள் எடுத்து வருகிறார். இவர் அங்கு பயிலும் பல மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. 7,8ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 12 மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டதாக புகார் தந்துள்ளனர்.
பிரச்சனை குறித்து அங்கு பணிபுரியும் ஆசிரியர் சஜியா மற்றும் தலைமை ஆசிரியர் அணில் குமாரிடம் மாணவர்கள் புகார் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்வே அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறை பள்ளிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பள்ளி கழிவறைகளில் ஆணுறைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோரிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறை புகாருக்கு ஆளான 30 வயது கம்ப்யூட்டர் ஆசிரியரை கைது செய்தது. மேலும், தலைமை ஆசிரியர் அணில், ஆசிரியர் சஜியா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ மற்றும் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார கல்வி அலுவலர் பிரியங்க் ஜெயின் உறுதி தெரிவித்துள்ளார்.