காங்கிரஸ், கர்நாடகத் தேர்தலில் மகத்தான வெற்றி; மகுடம் யாருக்கு?
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றிபெற்றது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தோல்வியைத் தழுவியது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்துக்கான தேர்தல் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. அதில் 223 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றியது.
அக்கட்சி கர்நாடகாவில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை.
அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஜெயநகர் தொகுதியில் முதலில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மறுவாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் சி.கே.ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவில்தான் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. ஆட்சி அமைக்க 113 இடங்களே தேவை என்ற நிலையில் 135 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. அக்கட்சிக்கு 42.88 விழுக்காட்டு வாக்குகள் பதிவாயின.
விறுவிறுப்பான தேர்தல் களத்தில் கட்சி வாகை சூடினாலும் முதல்வர் பொறுப்பை ஏற்க இருப்பவர் யார் என்பது குறித்த குழப்பம் நிலவுகிறது.
முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும் தற்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்குத் தீர்வுகாணும் வகையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாலை பெங்களூரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முதல்வரைத் தேர்ந்து எடுக்கும் நோக்கில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் மாநில முதல்வரை ஒருமனதாகத் தேர்வு செய்யவே காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாகத் தெரிகிறது. எனவே, முதல்வர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்து கட்சி மேலிடத்துக்குத் தெரிவிக்கப்படும். அதன்பிறகு முதல்வரை கட்சி மேலிடம் தேர்ந்தெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சித்தராமையாவுக்கும் தமக்கும் இடையில் கருத்து வேற்றுமை எதுவும் இல்லை என்று திரு சிவக்குமார் நேற்று கூறினார்.
இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் இரவு பதவி விலகினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இது பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வி அன்று. அவர் தேசியத் தலைவர். காங்கிரஸ் தலைமைத்துவம் நாடு முழுவதும் தோல்வியைத் தழுவியதுண்டு,” என்று கூறினார். கர்நாடகாவின் புதிய முதல்வர் இம்மாதம் 17 அல்லது 18 ஆம் தேதி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் கூறுகின்றன.