வடக்கு, கிழக்கு உட்பட சர்ச்சைக்குரிய 3 ஆளுநர்கள் பதவியிலிருந்து நீக்கம்! – ஜனாதிபதி அதிரடி.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று (15) அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய மூன்று மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளனர் என்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மேற்படி மூன்று ஆளுநர்களும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். மூவருக்கும் எதிராக அந்தந்த மாகாண மக்கள் பிரதிநிதிகளால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.