நீக்கப்பட்ட மூன்று ஆளுநர்களுக்கு பதிலாக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள மூன்று புதிய ஆளுநர்கள்?
நேற்று (15) பதவியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று ஆளுநர்களுக்கு பதிலாக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள மூன்று புதிய ஆளுநர்களின் பெயர்கள் எமக்கு கிடைத்துள்ளன.
இதன்படி, வடக்கின் புதிய ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்பட உள்ளார்.
கிழக்கின் புதிய ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார்.
வடமேற்கு மாகாண சபையின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்க இந்த நீக்கத்தை மேற்கொண்டுள்ளதாகவும், புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) க்குள் நியமிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத், வடமேற்கு மாகாண ஆளுநராக கடற்படையின் அட்மிரல் வசந்த கர்ணகொட, வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் , அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (பொஹொட்டுவ) பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் நேற்று (15) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ஆளுநர்களை நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கே அதிகாரம் உள்ளது என தெரவித்திருந்தார்.
பொஹொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவினால் சிபாரிசு செய்யப்பட்ட ஐந்து (05) ஆளுநர்கள் தொடர்ந்து சேவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேல்மாகாண ஆளுநரையும் நீக்கும் திட்டம் இருந்ததாகவும், ஆனால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டதாகவும் தெரியவருகிறது.