அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பற்றி இப்போது பேசத் தேவையில்லை! – மொட்டு எம்.பி. கூறுகின்றார்.
உரிய நேரத்தில் எமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் என்று மொட்டுக் கட்சி எம்.பி. திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“2024 ஆம் ஆண்டு நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் கட்சிகளுக்குள் இப்போதே கதை அடிபடத் தொடங்கியுள்ளது. இப்போதே இது பற்றிப் பேச வேண்டிய தேவை இல்லை.
நாங்கள் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ஒருவரைக் கொண்டு வந்தோம். அவரை ஜனாதிபதியாக்குவதற்கு நாம் கடுமையாக உழைத்தோம்.
பல எதிர்பார்ப்புகளுடன் – கனவுகளுடன்தான் அவரைக் கொண்டு வந்தோம். ஆனால், திறமையற்ற நிர்வாகம் காரணமாக நிலைமை தலைகீழாக மாறியது.
கோட்டாபய ராஜபக்சவைக் கொண்டு வந்தோம். அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கினோம். ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
இப்போது புதிய ஜனாதிபதி ஒருவர் வந்துள்ளார். அவரது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது எங்களது கடமை. அதைவிட்டுவிட்டு இப்போதே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பற்றிப் பேசத் தேவையில்லை.
உரிய நேரத்தில் அந்த வேட்பாளரை நாம் வெளியே கொண்டு வருவோம். அவர் ரணிலாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஒருவராகவும் இருக்கலாம். இப்போது அது பற்றி நாம் கட்சிக்குள் விவாதம் நடத்தவில்லை.
மக்களுக்கு யார் ஜனாதிபதி என்பது முக்கியமல்ல. அவர்களுக்குத் தேவை நாட்டைச் சரியான முறையில் கொண்டு செல்கின்ற ஒருவர்தான். அப்படியான ஒருவர்தான் ஜனாதிபதியாக வேண்டும்.” – என்றார்.