சிறைக் காவலர் உள்ளிட்ட 11 பேர் கூண்டோடு கைது.

ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சிறைச்சாலை சிறைக் காவலர் உட்பட 11 பேருடன் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கம்பஹா தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மினுவாங்கொடைப் பகுதியில் போதைப்பொருள் விநியோகம் செய்த ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, உக்கல்பட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பெறச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த தகவலின் பிரகாரம், ஹோட்டல் முகாமையாளருக்கு போதைப்பொருள் வழங்கியதாக கூறப்படும் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், ராகம பகுதியைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் போதைப்பொருள் கொடுப்பது தெரியவந்தது.
அதன்படி, அந்த சிறைச்சாலையின் இரண்டாம் வகுப்பு சிறைக் காவலர் கம்பஹா, கிரிதிவிட்ட பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்ட போது, அவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.