மீண்டும் வடக்கின் ஆளுநராகப் பதவியேற்ற சார்ள்ஸிடம் ரணில் கூறியது என்ன?
“வடக்கு மாகாண மக்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.”
இவ்வாறு வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
புதிய ஆளுநராக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறும் போது செய்தியாளர்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. வடக்கு மாகாணத்தில் மக்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி முழுமையான ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்குவார் என்று உறுதியளித்துள்ளார். இவ்விதமான தாராளமான மனதுடைய ஜனாதிபதியின் கருத்துக்களையிட்டு நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன்.
வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடுவார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பின்படியே மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியைப் பொறுப்பேற்றுள்ளேன்.
வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்காகக் கொண்டு வடக்கு மக்கள் பிரதிநிதிகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.
அதேநேரம், வடக்கில், சீனா, இந்தியாவின் முதலீடுகள் தொடர்பான முடிவுகள் மத்திய ஆட்சியின் தீர்மானத்துக்கமைய முன்னெடுக்கப்படுபவை. அவை தொடர்பில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.” – என்றார்.