விஷச்சாராய விவகாரத்தில் விளம்பரம் தேடும் ஆளுநர் – முரசொலி விமர்சனம்
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையில், நடந்தவை குறித்த முழு விபரங்களை அரசு அதிகாரியை தொடர்புகொண்டு அறிந்திருக்க முடியும் என்ற சூழலில், ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டது ஆளுநரின் விஷமத்தனத்தை வெளிக்காட்டும் விதமாக உள்ளது என தெரிவித்துள்ளது.
பாஜக ஆளும் குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷச்சாராயம் குடித்து பலியானபோது, அங்குள்ள ஆளுநர்கள் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா என்பதை ஆர்.என்.ரவி அறிந்திருக்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. விஷச்சாராய விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளது.
அரசியல் தெளிவு, வரலாறு அறியாத ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ள முரசொலி, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவிக்குரிய தகுதியை சீரழிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது என குறிப்பிட்டுள்ளது.