மே 24 ஆம் திகதி தப்புமா ஜனக ரத்நாயக்கவின் தலை?

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அது நிறைவேற்றப்படுமா என்பது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 10 அமைச்சர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 120 எம்.பி.க்கள் குழு உள்ளது, இந்த 10 பேரும் வாக்குப் பதிவின் போது அவையில் இல்லை என்றால் எம்.பி.க்களின் எண்ணிக்கை 110 ஆகிவிடும்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அன்றைய தினம் ஆளும் கட்சி 113 உறுப்பினர்களின் பெரும்பான்மையைப் பெற வேண்டும்.
இதற்கு மேலதிகமாக மொட்டுக் கட்சியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து, தமது மனச்சாட்சிக்கு இணங்க இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
அந்தக் குழுவில் சுமார் 20 எம்.பி.க்கள் உள்ளடங்குகின்றனர் என்று தெரியவருகின்றது.
எனினும், குறித்த பிரேரணை நிச்சயம் நிறைவேறும் என ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.