சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு 8 மாத போனஸ்.
பெரும் லாபத்தை ஈட்டிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) அதன் கீழ்நிலை ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட எட்டு மாத போனஸ் வழங்க இருக்கிறது.
லாபப் பகிர்வு போனசாக கிட்டத்தட்ட 6.65 மாத போனஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் அவர்களது கடுமையான உழைப்பையும் கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது செய்த தியாகங்களையும் அடையாளம் காணும் வகையில் கூடுதலாக ஒன்றரை மாத போனசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சங்கங்களுடன் இணக்கம் காணப்பட்ட நீண்டகால அணுகுமுறைக்கு உட்பட்டு இந்த வருடாந்திர லாபப் பகிர்வு வழங்கப்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூன்று ஆண்டு உருமாற்றத் திட்டம் அதன் போட்டித்தன்மையை மேம்படுத்தியதுடன் அடித்தளத்தையும் வலுப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கீழ்நிலை ஊழியர்களுக்குக் கூடுதல் போனஸ் வழங்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். இந்தக் கூடுதல் ஒன்றரை மாத போனஸ் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தற்போது 24,000 ஊழியர்கள் உள்ளனர். இது ஆண்டு அடிப்படையில் 12.3 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது.
2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 4,300 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவர் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இருப்பினும், அதில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் மட்டுமே ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி வருடாந்திர வருமானமாக $2.2 பில்லியன் ஈட்டியதாக அந்நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அதற்கு முந்திய ஆண்டில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு $962 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.
ஆண்டு அடிப்படையில் வருமானம் 133.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.