வடக்கில் மேலும் பறிபோகும் தமிழர்களின் காணிகள்!
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ‘ஜே’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்கனவே ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 8 கிராம அலுவலர் பிரிவுகளை உடனடியாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் அரசியல்வாதிகளின் தலையீட்டையடுத்து அது ஒத்திப்போடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் புதிதாக ‘ஜே’ வலயம் உருவாக்கப்பட்டு அதனுள் முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு உள்வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதும் எத்தனை கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதே ‘ஜே’ வலயத்தினுள் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவின் 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
மகாவலி ‘ஜே’ வலயத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள அரச மற்றும் தனியார் காணி விவரங்கள், வீதிகள், அங்குள்ள குளங்கள், வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள், முன்னெடுக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகள் உட்பட அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கடந்த 2ஆம் திகதி தனிச் சிங்கள மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் ஏற்கனவே பல்வேறு அரச திணைக்களங்களாலும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது.