அரசியல் தீர்வு காண வேண்டும்! – சர்வதேசத்தின் விருப்பமும் அதுவே என்கிறார் ரணில்.
“தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில்,
“போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது.
எனினும், வடக்கு, கிழக்கு மக்கள் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்க்கவில்லை. போர் ஏன் மூண்டதோ அதற்கான தீர்வையும் அவர்கள் விரும்புகின்றார்கள். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்பமும் இதுவாக உள்ளது. எனது விருப்பமும் அதுவே.
இலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இன்னமும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை.
தீர்வை நாம் விரைந்து காண வேண்டும். தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பை எனக்கு வழங்க வேண்டும்.” – என்றார்.