ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு
ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் உடன் கலந்துரையாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 19ஆம் தேதி) முதல் மே 24ஆம் தேதி ஆறு நாட்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜி 7 மாநாட்டிற்காக முதலில் ஜப்பான் செல்லும் பிரதமர் அங்கிருந்து பப்புவா நியூ கினியா செல்லும் மோடி, அங்கு நடைபெறும் இந்திய – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசுகிறார். தொடர்ந்து அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்கிறார்.
முதல்கட்டமாக, நேற்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், அந்நாட்டில் நடைபெற உள்ள G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றார். ஹிரோஷிமா நகரை அடைந்த அவருக்கு விமான நிலையத்தில் மலர் கொத்துக்களை கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர், ஷெரட்டன் ஹோட்டல் சென்ற பிரதமர் மோடிக்கு, ஜப்பான் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் போன்ற முழக்கங்களை எழுப்பி பிரதமரை அவர்கள் உற்சாகப்படுத்தினர்.
இதையடுத்து, ஜப்பான் வாழ் இந்தியர்களின் குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் தங்கள் செல்போனில் பிரதமருடன் செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர், ஹிரோஷிமாவில் காந்தி சிலை ஒன்றை பிரதமர் திறந்து வைத்தார். தங்களுக்கு பிரதமரை சந்தித்ததும் அவருடன் பேசியதும், தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.