சுதர்மா நெதிகுமாரவின் பணிப்பெண் பொலிஸ் காவலில் மரணம்… கைதாகப் போகும் வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள்!
இந்த நாட்டில் சர்ச்சைக்குரிய பெண் கதாபாத்திரமாக விளங்கிய சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டு பணிப்பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் எதிர்வரும் வாரத்தில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் நிலைய அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் , இந்த குற்றச் செயலுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த பணிப்பெண், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் அதிகாரிகளினால் தாக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி காலை சுதர்மா நெத்திகுமார, தான் மோதிரத்தை காணவில்லை எனவும், தனது முன்னாள் வேலை செய்த வீட்டுப் பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது பொரளை கொட்டா வீதியில் உள்ள வேறொரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்த பணிப்பெண்ணை கைது செய்து, சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தார்.
சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு இத்தகவல்களை மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெலிக்கடை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செலுத்திய செல்வாக்கு காரணமாகவே இந்த உடனடி கைது மற்றும் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.