14 வது தேசிய படைவீரர் தின நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்….
தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள படைவீரர்களை நினைவுகூர்வதற்கான சதுக்கத்தில் (19) நடைபெற்றது.
மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் இராணுவத்தினர் வெற்றிகொண்டு 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன. யுத்தத்தில் இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுக்காப்பு படைகளை சேர்ந்த 28,619 படையினர் உயிர் நீத்தனர். 27,000 இற்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் இராணுவ சேவை அதிகாரசபையினால் 2023 படைவீரர் நினைவு தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரால் போரில் உயிர் நீத்த படையினருக்கு இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அனைத்து மத வழபாடுகளுடன் ஆரம்பமாகிய நிகழ்வு நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்காக உயிர்தியாகம் செய்த இராணுவ, விமானப்படை, கடற்படை ,பொலிஸ், மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களை கௌரவிப்பதற்கான வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரதமித்த பண்டார தென்னகோன், உள்ளிட்ட அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஷவேந்திர சில்வா தலைமையிலான முப்படைகளின் தளபதிகள்,பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட முன்னாள் முப்படைகளின் தளபதிகள், இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள், ஆகியோரால் படைவீரர்கள் நினைவேந்தல் சதுக்கத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.