வடக்கு, கிழக்கு, தெற்கில் புலிகளை நினைவேந்தியோரைச் சிறையில் தூக்கிப் போட வேண்டும்!
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர். வடக்கு – கிழக்கில் நினைவேந்தல் நடத்தியவர்களையே கைது செய்து சிறையில் போட வேண்டும். இந்தநிலையில் கொழும்பில் நினைவேந்தல் நடத்த இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? இவர்கள் இவ்வாறு செய்வதை நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கோம்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் தெரிவித்தனர்.
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு வெளியிட்டமை தொடர்பில் கேட்ட போதே அவர்கள் மேற்கண்டவாறு பதிலளித்தனர்.
அவர்களின் கருத்துக்கள் வருமாறு:-
சரத் வீரசேகர
“நினைவேந்தல் நிகழ்வுகளை தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கில் நடத்துவதே குற்றம். இந்தநிலையில் அந்த நிகழ்வை தெற்கில் நடத்த தமிழர்களுக்கு அனுமதியைக் கொடுத்தது யார்?
நினைவேந்தல் என்ற பெயரில் புலிப் பயங்கரவாதிகளையே தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்வை அவர்கள் நாடெங்கும் பகிரங்கமாக நடத்த முற்படுவதை அனுமதிக்க முடியாது.
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேவேளை வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் எந்தப் பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வை தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்துவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் விரும்பினால் போரில் உயிரிழந்த தமது உறவினர்களை தத்தமது வீடுகளில் நினைவேந்தட்டும்.” – என்றார்.
விமல் வீரவன்ச
“இறுதிப் போரில் உயிரிழந்த புலிகளை இந்த முறை வடக்கிலும், கிழக்கிலும், கொழும்பிலும் நினைவேந்திய அனைவருக்கும் எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
நல்லாட்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட ஊழல், மோசடி ஆட்சியால் புலிகளை நினைவேந்த அரசு அனுமதி வழங்கியிருந்தது. அந்த நல்லாட்சியின் பிதாமகன்களில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசு புலிகளை எந்தப் பகுதிகளிலும் சுதந்திரமாக நினைவேந்துவதற்கு இம்முறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதியை வழங்கியது யார்? அமைச்சரவை வழங்கியதா அல்லது நாடாளுமன்றம் வழங்கியதா? விசித்திரமான இந்த ஆட்சியில் எதுவும் நடக்கலாம். ஆனால், நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என்பதை ஆட்சியாளர்களிடம் தெரிவித்துக்கொள்கின்றோம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது ஜனாதிபதிக்கு விளங்கும்.” – என்றார்.