காரைக்கால் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவைக்கு இந்தியாவின் அனுமதி இன்னும் இல்லை!
இந்தியாவின் காரைக்காலுக்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை இந்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட போதும் இந்திய வெளிவிவகார அமைச்சின் இறுதிக்கட்ட அனுமதிகள் வழங்கப்படாமையால் சேவைகளை ஆரம்பிப்பத்தில் காலதாமதம் நீடிப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பயணிகள் கப்பல் சேவை முன்னதாக ஏப்ரல் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மே 15ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சின் அனுமதி எப்போது கிடைக்கும் என்பது தெரியாததால் கப்பல் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி நீடிக்கின்றது.
இதேவேளை, காரைக்கால் துறைமுகத்தை இந்தியாவின் அதானி குழுமம் பொறுப்பேற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் அனுமதி கிடைத்தாலும், காரைக்கால் துறைமுகத்தின் ஆரம்பகட்ட உட்கட்டுமான மறுசீரமைப்புப் பணிகள் முடிந்த பின்னரே பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எதிர்வரும் 5ஆம் திகதி சென்னை துறைமுகத்திலிருந்து 1,600 சுற்றுலாப் பயணிகளுடன் ‘எம்ப்ரஸ்’ என்ற பயணிகள் கப்பல் இலங்கையை நோக்கி வருகை தரவுள்ளது.
இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லவுள்ளது. 3 நாள் சுற்றுலாவுக்காக இந்திய ரூபாவில் 85 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளது.