கணினிமயமாகும் கிராம ஊராட்சிகள் : ஆன்லைன் மூலம் மட்டுமே வரி
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுவருகின்றன. கணினிமயமாக்கப்படுவதன் காரணமாக மக்கள் சேவைகள், மக்கள் தேவைகளை விரைவாக செய்துமுடிக்க முடிகிறது. மேலும், அரசு அலுவலங்களில் நடைபெறும் லஞ்சத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பினும் இன்னமும் கணினிப் பயன்பாடு 100 சதவீதத்தை எட்டவில்லை.
தமிழ்நாடு முழுவதும் 12,000-க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அந்தந்த ஊராட்சிகளுக்கு சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்திவருகின்றன. தற்போது, நேரில் சென்று இந்த வரிகளை செலுத்தும் சூழல் உள்ளது. இந்தநிலையில், கிராம ஊராட்சிகளில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் இணையதளம் மூலமாக செலுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அனுமதி நாளை முதல் இணையதளம் மூலமாக வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் கட்டடங்களுக்கான அனுமதி வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட இணையதளம் நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.