பிரதமர் மோடியின் இருக்கையை தேடி வந்து ஆரத்தழுவிய ஜோ பைடன்
ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஜி7 கூட்டமைப்பின் 49-வது உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஹிரோஷிமா சென்றார். தொடர்ந்து ஜி7 உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது ஜி7 மாநாடு நடந்த அரங்கில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியை கண்டதும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியின் இருக்கை அருகே வந்தார். அப்போது பிரதமர் மோடி, பைடனை ஆரத்தழுவி வரவேற்றார்.
பின்னர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உடனான சந்திப்பை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். பிறகு இருநாட்டுத் தரப்பிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரை நிறுத்துவதற்காக தானும் இந்தியாவும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் மோடி கூறியதாக தெரிவித்தார்.