பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிகளை விதித்த அரசு
அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த அரசு அம்மாநிலத்தில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி, ஆசியர்கள் பார்மல் சட்டை, பேண்ட் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். அவர்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற கேஸ்சுவல் உடைகள் அணிய கூடாது. அதேபோல, பெண் ஆசிரியர்கள் புடவை, சல்வார் போன்ற உடைகள் தான் அணிய வேண்டும். கேஸ்சுவல் உடைகளான டி-ஷர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் பேண்ட் போன்றவற்றை உடுத்தி வரக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் ஆண், பெண் ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான, மென்மை நிறம் கொண்ட உடைகளை தான் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேஸ்சுவலாக, பார்ட்டிக்கு வருவது போல உடை உடுத்துவதை ஏற்க முடியாது. இதை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கடும் தண்டனை தரப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியது அரசு கவனத்திற்கு வந்ததாகவும், இதை சீர் செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அசாம் அரசு தெரிவித்துள்ளது.
கல்வி நிலையம் போன்ற பொது இடங்களில் கண்ணியக்குறைவான ஆடைகள் உடுத்துவதை ஏற்க முடியாது, மாணவர்கள் முன் ஆசிரியர்கள் முன்னுதாரணமாக முறையில் தோற்றமளிக்க வேண்டயது ஆசிரியர்களின் கடமை என அம்மாநில கல்வி அமைச்சர் ரோனுஜ் பெகு தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவரும் இதை உணர்ந்து பின்பற்றுவார்கள் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.