18 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 201 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய ஐதராபாத்துக்கு எதிரான 69-வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதையடுத்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விவ்ராந்த் சர்மா, மயங்க் அகர்வால் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். விவ்ராந்த் சர்மா 47 பந்துகளில் 69 ரன்கள் (9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதேபோல் மயங்க் அகர்வால் 46 பந்துகளில் 83 ரன்கள் (8 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து அவுட்டானார்.
தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 18 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 14 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து கேப்டன் ரோகித் சர்மாவுடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர். 2-வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் சதமடித்து 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், 18 ஓவர்களில் மும்பை அணி 201 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை அணி அடுத்து நடைபெற உள்ள பெங்களூரு-குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுக்காக காத்திருக்கிறது.