ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விவகாரம்- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவுரை
2016-ம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பு நீக்கம் செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, புதிய 500 ரூபாய் நோட்டும், 2,000 ரூபாய் நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாமல் இருந்தது.
குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்களிடம் சுத்தமாக புழக்கத்தில் இல்லை. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘செப்டம்பர் 30-ம் தேதித்துக்குள் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன. பொதுமக்கள் தங்களிடமுள்ள 2,000 ரூபாய் வங்கியில் கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மே 23-ம் தேதி முதல் இந்த நடைமுறை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும். குடிநீர், இருக்கை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பொதுமக்கள் மாற்றும் 2,000 ரூபாய் நோட்டு வரவு தொடர்பான தினசரி தரவை கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் தனி கவுண்டர்கள் வசதி அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ‘2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு அவசரப் பட வேண்டும். செப்டம்பர் 30-ம் தேதி வரை நான்கு மாத கால அவகாசம் உள்ளது. தற்போதே பெட்ரோல் பங்குகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் கூடுகின்றனர்.
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் உள்ள பிரச்னைகள் குறித்து ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தியுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுதல் என்பது வழங்கமான ரூபாய் நோட்டுகளை மேலாண்மை செய்யும் ஒரு செயல்பாடுதான்’ என்று தெரிவித்துள்ளார்.